🕸 உள்ளுராட்சி மன்றங்களுக்கான இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வு 💻👐

வடமாகாணத்தின்  34 உள்ளுராட்சி மன்றங்களால் உருவாக்கப்பட்ட இணையத்தளங்களுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு  01.03.2024 அன்றையதினம் காலை 10மணியளவில் பிரதம செயலாளர் அலுவலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பிரணவநாதன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது 34 உள்ளுராட்சிமன்றங்களுக்குமான  இணையத்தளங்கள் வடக்குமாகாண கௌரவ ஆளுநர்  பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களினால் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில்  வடமாகாண கௌரவ ஆளுநர்  பி.எஸ்.எம் சாள்ஸ்  அவர்கள் கருத்துத்தெரிவிக்கையில் நேரவிரயமில்லாமல் தமது தேவையினை நிறைவேற்ற எண்ணும் இன்றைய கால நவீன சமூகத்திற்கு இணையத்தளம் சிறந்த வரப்பிரசாதமாக இருக்கும் என தெரிவித்தார்.

அத்துடன் உள்ளுராட்சி நிறுவனங்கள் ஆளுகின்ற அமைப்பாக காணப்படுகின்றது எனவும் வரிசேகரிப்பு,சட்டஉருவாக்கம்,சேகரித்த பணத்தினை திட்டமிட்டு செலவழித்தல் மற்றும் திட்டமொன்றை உருவாக்கி அதனை நிறைவேற்றி முடித்தல் போன்றனவற்றிற்கு அதிகாரத்தினை கொண்டு காணப்படுவதனால் ஏனைய அரச நிறுவனங்களிலிருந்து உள்ளுராட்சி நிறுவனங்கள் தனித்துவம் மிகுந்தவை எனவும் வடமாகாண கௌரவ ஆளுநர்  பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து இந்த இணையத்தள உருவாக்கத்தில் முழு ஈடுபாட்டுடன் செயற்பட்ட உள்ளுராட்சி சபை உத்தியோகத்தர்களுக்கும் இவ் இணையத்தள உருவாக்கம் தொடர்பான பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் உத்தியோகத்தர்களுக்கு வழங்கி இவ் இணையத்தள உருவாக்கத்தில் உறுதுணையாக இருந்த வளவாளர் குழாத்தினருக்கும் மெச்சுரைகள் வழங்கி கௌரவிக்கப்பட்து.

எமது சபைக்கான இணையத்தளத்தினை (www.vavuniyastamil.ps.gov.lk)  எமது சபை உத்தியோகத்தர்களான திருமதி.றம்மியா டினோட் றொசாந்,திரு.வாமதேவா துவாரகன் மற்றும் திருமதி.வினிற்றன் மிலோஜா ஆகியோர் வடிவமைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ் அங்குரார்ப்பண நிகழ்வில் வடக்குமாகாண பிரதமசெயலாளர்,உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர்,வடமாகாண உள்ளுராட்சி உதவி ஆணையாளர்கள்,சபை செயலாளர்கள்,UNDP அமைப்பின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *