எமது சபைக்கு 25.07.2024 அன்றையதினம் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்(BMICH) நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சிமன்றங்களின் செயற்றிறனை மதிப்பிடுவதற்கான ஸ்வர்ணபுரவர தேசியவிருது வழங்கும் விழாவில் கௌரவ பிரதமர் தினேஸ் குணவர்த்தன அவர்களால் ஸ்வர்ணபுரவர தேசியவிருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
நாடுமுழுவதுமுள்ள 276 பிரதேசசபைகளுக்குள் கட்டம் கட்டமாக நடாத்தப்பட்ட சபைகளின் செயற்றிறன் மதிப்பீட்டின் அடிப்படையில் எமது சபையானது தேசிய ரீதியிலான மதிப்பாய்வுக்கு தெரிவுசெய்யப்பட்டது.அதனடிப்படையில்
1. செயற்றிறன்
2. இணக்கப்பாடு
3. வினைத்திறன்
4. புத்தாக்கம்
5. நல்லாட்சி
ஆகியபிரிவுகளின்கீழ் நடாத்தப்பட்ட தேசிய ரீதியிலான மதிப்பீட்டின் முடிவுகளின்படி எமது சபையானது வினைத்திறன் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டில் அதிகூடிய புள்ளிகளைப்பெற்று முதலிடத்தை பெற்றுக்கொண்டதுடன் இதற்கான சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அத்துடன் மேற்கூறப்பட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின் மொத்தபுள்ளிகளின் அடிப்படையில் எமது சபை மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டது. அதனடிப்படையில் எமது சபைக்கு வெண்கல ஸ்வர்ணபுரவர தேசியவிருது மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
எமது சபை இந்த கௌரவத்தை பெறுவதற்கு பல்வேறுதரப்பினர் தமது ஒத்துழைப்பினை எமக்கு வழங்கியிருந்தார்கள்.அவர்களை நாம் இந்நேரத்தில் நன்றியுடன் நினைவுகூர கடமைப்பட்டுள்ளோம்.
அந்தவகையில் முதலாவதாக எமது சபையின் சகல உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் எமது உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.நாம் இக்கௌரவத்தை பெற இவர்களின் அர்ப்பணிப்பும் ஒத்துழைப்பும் அளப்பெரியது.
அடுத்து எமது உள்ளூராட்சி ஆணையாளராக இருந்து தற்சமயம் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக பதவியுயர்வு பெற்றிருக்கும் திரு.பிரணவநாதன் Sir அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
நாம் அடுத்து எமது உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அவர்களுக்கு எமது உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.இவரது ஆலோசனைகள் நாம் இக்கௌரவத்தை பெற பெரிதும் பங்களிப்பு செய்தது.
எமது உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக ஆய்வுஉத்தியோகத்தர் மற்றும் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இந்த செயற்றிறன் மதிப்பீட்டில் எமது சபைக்குட்பட்ட பகுதிகளில் தமது பொதுசுகாதார நடவடிக்கைகள் மூலம் அதிகளவான புள்ளிகளை ஈட்டித்தந்து தமது பூரண ஒத்துழைப்பினை எமக்கு வழங்கி உதவிய சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுசுகாதார பரிசோதகர்கள் ஆகியோருக்கு விசேடமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அடுத்ததாக எமது சபையின் கீழ் இயங்கும் அனைத்து சனசமூக நிலையங்களுக்கும் எமது உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.இவர்களும் எமக்கு பூரண ஒத்துழைப்பு நல்கியிருந்தார்கள்.
நாம் இந்த செயற்றிறன் மதிப்பீட்டில் அதிகளவான புள்ளிகளை பெறுவதற்கு CDLG PROJECT மற்றும் OFFER CYLON நிறுவனம் மூலம் நடாத்தப்பட்ட பயிற்சிநெறிகளும்,அவர்கள் எமக்கு வழங்கிய ஆலோசனைகளும்,வழிகாட்டுதலும் முக்கிய பங்காற்றின என்றால் அது மிகையாகாது.இவ்வாறு எமக்கு ஒத்துழைப்பு நல்கிய CDLG PROJECTக்கு பொறுப்பான உத்தியோகத்தர்களுக்கும் OFFER CYLON நிறுவனத்திற்கும் நாம் எமது விசேடமான நன்றிகளை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.
இறுதியாக சபையுடன் எப்போதும் பக்கபலமாக இருக்கும் எமது அன்பான பொதுமக்களுக்கும் எமது உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதில் பேருவகை அடைகின்றோம்.
அத்துடன் இவ்விருது வழங்கும் விழாவில் எம்முடன் விருதுபெற்ற அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
நன்றி
மக்கள் சேவை தொடரும்…







